திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல்படி வடமொழிக்கு எந்த வகையிலும் பாகுபாடின்றி தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும். நமது மாவட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகிய பெருமக்கள் இதை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சியின் தலைவர் அ. வியனரசு வலியுறுத்தி இன்று காலை தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில் திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வை தமிழில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதி பேராணை மனு எண் -17066/2025) ஒரு வழக்குத் தொடர்ந்தேன். அதில் வரும் (07.07.2025) அன்று திருச்செந்தூரில் நடைபெற உள்ள முருகன் கோவில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்களை பயன்படுத்தக் கோரி இந்து சமய அறநிலை துறை ஆணையர் உள்ளிட்ட பலருக்கு பல மனுக்கள் அனுப்பி இருந்தேன்.

அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும் நாடாண்ட தமிழ் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவைகள் நம்முடைய பழந்தமிழ் நாகரீகமும் பண்பாடும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு தோன்றியவைகளாகவும், அதோடு குடிகள் குடிகளை தழுவிய கோயில்கள் என குன்றக்குடி அடிகளார் உறைப்பார் காலங்காலமாகத் தமிழ்நாட்டு திருக்கோயில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. இன்றும் அவை கிராமங்களில் குலதெய்வ கோயில்களில் தொடர்கிறது. தேவாரம் பாடிய சுந்தரர் "அர்ச்சனைப் பாட்டும் தமிழே" என்றார் "என்னை நன்றாக படைத்தனன். தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்றார் திருமந்திரத்தில் திருமூலர் நாளடைவில் திருக்கோயில்களின் வழிபாடுகள் எல்லாம் வடமொழி மையமாகிவிட்டது இந்நிலையில் பக்தர்களின் வழிபாடுகள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வுகள் யாவற்றிலும் "தெய்வத்தமிழ்" இடம்பெற வேண்டும். என அடியார்களாலும், பக்திமை உள்ளம் கொண்ட தமிழ் சான்றோர்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவ்வகையில் தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் அன்றாட வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் அன்னை மொழியாம் தெய்வத் தமிழிலேயே நடத்த வேண்டும். என்பது தமிழ் மக்களின் விருப்பமாகும். அதை ஏற்று உயர் நீதிமன்றமும் தஞ்சை பெருவுடையார் பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நல்ல தீர்ப்புகளை அளித்துள்ளது. அது போல் 2015 டிசம்பரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சமஸ்கிருதத்தில் தான் கருவறை அர்ச்சனை நடைபெற வேண்டும் என எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை என்றுதிபடத் தெரிவித்தது.

மேலும் தமிழ்நாடு அரசு கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்வதற்கு இந்து அறநிலைத்துறையின் சுற்றறிக்கையும் (எண் 73848/1997) அரசாணையும் (எண் -520/18.11.1997) கோயில்களின் கருவறையிலும் கோபுர கலசங்களில் புனித நீர் தெளிப்பு மற்றும் வேள்விகளிலும் ஓதுவதற்கு தமிழ் மந்திரங்களை தமிழ்நாட்டு அரசின் இந்து அறநிலைத்துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அதற்காக அர்ச்சகர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. என எடுத்துரைத்து இந்து அறநிலைத்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியதையும் அ. வியனரசு ஆகிய நான் எனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த வழக்கு (26.06.2025) அன்று விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு வழிபாட்டை தமிழில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதி அரசர்கள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் உங்கள் வாய்மொழி பதிலுக்கும் நடைமுறைக்கும் வெகு தொலைவு இருக்கிறது. நீங்கள் சொல்வதை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டிருந்தனர்.

அந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதி அரசர்கள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் முன்னிலையில் (02.07.2025) அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடக்கவிருக்கும் குடமுழுக்கும் 50 விழுக்காடு சமஸ்கிருதமும் 50 விழுக்காடு தமிழில் கலந்து குடமுழுக்கு நடத்த தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்பித்திருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதி அரசர்கள் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசமான நிலை இல்லாமல் சமநிலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் வழக்கையும் முடித்து வைத்தனர்.

திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு வழிபாட்டை இந்து அறநிலைத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவாறு தமிழ், வடமொழி இருமொழியிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாட்டு நிகழ்வு நடத்த வேண்டும். இதை கண்காணிக்க ஒரு குழு அமைக்க கோரி எமது கோரிக்கைக்கு இதை இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிடுங்கள் என நீதி அரசர்கள் எமக்கு அறிவுறுத்தினார்கள்.

அப்படி ஆணையரிடம் முறையிடவும் ஆணையரதை ஆய்ந்து கண்காணிப்புக்குழு அமைக்கவும் போதிய காலம் இல்லாததால் நாங்களே குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் கண்காணித்து நீதிமன்ற உத்தரவுக்கு இந்து சமய அறநிலைத்துறை அறிக்கை மாறாக குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இதில் உடனடியாக கவனம் செலுத்தி குடமுழுக்கு வழிபாடு தமிழில் நடைபெற நமது மாவட்டம் அமைச்சர்களான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகிய பெருமக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க தமிழ் தேசிய தன்னுரிமை கட்சியின் ஆட்சித் தமிழ் புரட்சிக் கொற்றம் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

அதோடு நாளை மறுநாள் திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது போல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வருகின்ற 7 ம் தேதி அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் தலைவர் சாமு. காந்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.