கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் பேசும்போது :-
மத்திய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் திமுக கூட்டணி மக்கள் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வென்றது. இதையடுத்து திமுக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் நீட் தேர்வு போன்று இன்ஜினியரிங், மற்றும் கலை கல்லூரிகளுக்கும், நுழைவுத் தேர்வு கொண்டு வருகின்றனர். அது போல் குலக்கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு எந்த பிரிவு எடுக்க வேண்டும் என்பதனை ஆசிரியர், பெற்றோர்கள் வழிகாட்டுதல் மூலம் தான் எடுக்கின்றனர்.
அவர்களை எட்டாம் வகுப்பில் எந்த பிரிவில் படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை கல்வியை தனியார் மயமாக்குவதற்கு வித்திடப்பட்டுள்ளது. தாய் மொழியை பாதுகாக்க உயிரை நீத்த வரலாறு கொண்ட மாநிலம் தமிழகம், தாய் மொழியை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் முதல் குரல் எழுப்பியதும் மற்ற மாநிலங்களும் தங்களது தாய் மொழியை பாதுகாக்க துவங்கி விட்டார்கள்.
இந்தியாவுக்கே முதல்வர் ஸ்டாலின் கொள்கை வழிகாட்டியாக திகழ்கிறார். இவ்வாறு பேசினார். விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.