தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து நாள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி, ஐ.க்யூ.ஏ.சி மற்றும் காமராஜ் ஸ்டார்ட் அப் மையம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்துகின்றன.


முகாம் துவக்க விழாவில் ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் கெத்சியல் ஆகஸ்டா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை வகித்தார். துணை முதல்வர் அருணாச்சல ராஜன் மற்றும் இ.டி.சி ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 1 வரை நடைபெறும் இந்த முகாம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஹெர்பல் சோப் தயாரித்தல், கேக் தயாரித்தல், மிதியடி தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், மணப்பெண் அலங்காரம் மற்றும் அடிப்படை டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற ஆறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


இன்றைய நிகழ்ச்சியில் இரண்டாவது நாளாக கேக் தயாரிக்கும் பயிற்சி நடை பெற்றது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி சிறு தொழில்களை வளர்ப்பது குறித்து பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.