தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் ஐந்து நாள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. மே 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பெண்களுக்கு சுயதொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஹெர்பல் சோப் தயாரித்தல், கேக் தயாரித்தல், மிதியடி தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், மணப்பெண் அலங்காரம் மற்றும் அடிப்படை டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜர் கல்லூரி IQAC மற்றும் காமராஜ் ஸ்டார்ட்-அப் மையம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை வழங்குகின்றன. இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற நிகழ்வில், மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடைமுறை விளக்கங்களின் மூலம் புதிய திறன்களை கற்றுக்கொண்டனர். இந்த பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.