மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) திருத்தம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் எதிர்மறை தாக்கங்களைத் தடுக்கும் வகையில் முக்கியமான நடவடிக்கையாகும் என்று பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் Narendra Modi தலைமையிலான மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதியை உறுதி செய்யும் நோக்கில் இந்த திருத்தச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது என கூறினார். மேலும், இந்த சட்ட திருத்தத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை விளக்கிக் கூறிய அவர், வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் வெளிநாட்டு தலையீடு குறையும் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி வலுப்பெறுவதுடன், நிதி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உயரும் என்றும், சமூக சேவை அமைப்புகள் பொறுப்புடன் செயல்பட ஒழுங்கு நிலை உருவாகும் என்றும் கூறினார். வெளிநாட்டு நிதி சரியான பயனாளர்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், பொதுநலன் மற்றும் தேசிய நலனை முன்னிலைப்படுத்தும் மத்திய அரசின் இத்தகைய முயற்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கான உறுதியான அடித்தளமாக அமையும் என்றும் அன்னபூர்ணா தெரிவித்தார்.