தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்வு, வழக்கமான அரசியல் காட்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது. கார்கள், ஜீப்புகள் இல்லாமல், மாட்டு வண்டியில் வந்து மக்கள் கவனத்தை ஈர்த்தார் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” கட்சி வேட்பாளர் அருணா தேவி.


ஓசனுத்து–புதியம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், பாரம்பரியத்தின் நிழலில் மக்களின் ஆதரவை பெற்றது. மேளம், தாளம் ஒலிக்க, ஆதரவாளர்கள் உற்சாக கோஷங்களுடன் நீண்ட அணிவகுப்பாக நகர்ந்தனர். கட்சித் தலைவர் பொன் குமரன் தலைமையில் நடந்த இந்த ஊர்வலம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.


அங்கு அருணா தேவி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதியில் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்தார்.


வெற்றி பெற்றால் அரசு மருத்துவமனை அமைத்தல், பெண்களுக்கு தனிப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குதல், விழிப்புணர்வு மையங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


புதியம்புத்தூரில் பாதிக்கப்பட்ட ஜவுளித் தொழிலை மீட்டெடுப்பதோடு, விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காற்றாலைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உறுதி தெரிவித்தார். மேலும், திராவிடக் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் குறித்து விமர்சனம் செய்த அவர், “மாற்றத்தை மக்கள் தேடுகிறார்கள்; இந்த முறை அதற்கான தீர்ப்பை வழங்குவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.


மாட்டு வண்டியில் தொடங்கிய இந்த வித்தியாசமான அரசியல் பயணம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாற்றத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் தேர்தல் அதற்கான பதிலை அளிக்க உள்ளது.