தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அலீம்கோ நிறுவனம் இணைந்து ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை (29.11.2025 – சனிக்கிழமை) போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதனங்களை பெற விண்ணப்பிக்கலாம்.

உடல் இயக்க குறைபாடு, 100% பார்வை குறைபாடு, தொழுநோய், மூளை முடக்குவாதம், செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறன்களை கொண்டவர்கள் அனைவரும் இந்த தேர்வு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முகாமை முன்னெடுத்து வரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P. கீதாஜீவன் M.Com., B.Ed., தெரிவித்ததாவது: “மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற இந்த முகாம் பெரும் வாய்ப்பாக இருக்கும். அனைத்து பயனாளிகளும் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார்.

மேலும், முகாமிற்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக தனிப்பட்ட உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 9789265909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதலை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.