தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உப்பு உற்பத்தி தொழிலையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளான முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், சுமார் 3,000 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளத்திற்காக சிப்காட் மூலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதற்கிடையில், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் சப்-கலெக்டர் பிரபு தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாற்று இடம் வழங்கும் யோசனையை உப்பு உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்தனர்.



இதனைத் தொடர்ந்து உப்பளங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உப்பு உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ.பால், அழகேசன், சண்முகசுந்தர ராஜா, சண்முகநாதன், ஸ்ரீராம், பொன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் உள்ள உப்பளங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரண்டுவந்த உப்பு உற்பத்தியாளர்கள், ஆண்-பெண் தொழிலாளர்கள், மீனவர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 2,000 தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தனித்தனியாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.