தூத்துக்குடியில் சீன பட்டாசு மற்றும் சிலிகான் சீலண்ட் பசை கையாடல் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக (தவெக) வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி சோழா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஜான் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 314 மற்றும் 316(2)-ன் கீழ் சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற எண் 351/2026 ஆக கடந்த மே 15-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 அக்டோபர் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த 40 அடி கொண்ட கண்டெய்னரில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் இருப்பதை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றை நிறுவனத்தின் யார்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.



பின்னர், 2026 மே 11-ஆம் தேதி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டபோது, முதலில் இருந்த 708 பட்டாசு பைகளில் 101 பைகளும், 91 சிலிகான் சீலண்ட் பசை பைகளில் 87 பைகளும் மட்டுமே இருந்ததாகவும், மீதமுள்ள பைகளில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு மணல் உள்ளிட்ட பொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான நாகராஜன், ராஜேஷ்குமார், வினோத்குமார், ஜெயகிருஷ்ணன் மற்றும் அனுசிதியன்சன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து, நிறுவனத்திற்கு நம்பிக்கை மோசடி ஏற்படுத்தி, 607 பட்டாசு பைகளையும் 4 பைகள் சிலிகான் சீலண்ட் பசையையும் கையாடல் செய்திருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.