ஆடி மாதம் 18-ஆம் நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடம் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை, அபிஷேகம், மஹா யாகம் மற்றும் அன்னதானம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) கோலாகலமாக நடைபெற்றது.



சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழித்தோங்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி, காலை முதல் மாலை வரை மஹா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.



இதையடுத்து, பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.