தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களில் சேதமடைந்துள்ள மதகுகளை நேரில் ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான சீரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தாமிரபரணி ஆற்றின் மூலம் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் கால்வாய்கள் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருவதாகவும், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட வறட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் இந்த நீராதாரங்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் மாவட்டத்தில் பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும், இதனால் கார் பருவ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தாமிரபரணியில் அதிகளவு நீர்வரத்து இருந்தபோதிலும், கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றதாகவும், இதன் காரணமாக சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு சடையனேரி கால்வாய்க்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் வறட்சி நிலவியதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், தற்போதே அனைத்து பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி சீரமைப்பதுடன், குளங்களில் சேதமடைந்துள்ள மதகுகளை பழுதுபார்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் உள்ள புத்தன்தருவை, வைரவன்தருவை, தாங்கைகுளம், சடையனேரி குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் மற்றும் தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வெள்ளநீர் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, தேவையான சீரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டால், மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீர் சேமிப்பு உறுதி செய்யப்படுவதுடன், எதிர்கால வறட்சி பாதிப்புகளையும் பெருமளவில் தவிர்க்க முடியும் என்று சித்ராங்கதன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.