தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, அதனை கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டுவிபுரத்தில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன் அனல் பறக்கும் உரையாற்றினார். அவர் பேசியதாவது:–
“தமிழகத்தின் எதிர்காலம் இளைஞர்கள். ஆனால் இன்று அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டிய நிலையில், போதைப்பொருள் வலையில் சிக்கிக் கொள்வது மிகுந்த கவலைக்குரியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததற்கான சாட்சி. இது அரசின் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல, இளைஞர் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கும் நிலை,” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகியும், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவது ஏன்? தமிழகத்தை ‘போதை மையம்’ ஆக்க முயற்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுகிறது,” என்றார்.
அவர் தொடர்ந்து, “இளைஞர்களை காப்பாற்றுவதற்காக சிறப்பு கண்காணிப்பு படை அமைத்து, பள்ளி–கல்லூரி பகுதிகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும். அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும்,” என எச்சரிக்கை விடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,
“போதை இல்லா தமிழகம் வேண்டும்”, “இளைஞர்களை காப்பாற்று”, “அரசு பொறுப்பு ஏற்று பதவி விலகு” என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே. கோபால்சாமி, எஸ்.எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், ஏ.என்.ஆர். ராஜா, கண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி பிரிவு தலைவர்கள் வெள்ளத்தாய், ஜெயக்குமார், சின்னதங்கம், மணிகண்டன், பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.