தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்" என்ற இலக்குடன் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அந்த நோக்கத்திற்கேற்ப அனைத்து துறைகளிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நீண்டகால வீட்டுமனை கோரிக்கையையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.



1986-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி, இன்று 39 ஆண்டுகளை கடந்துள்ளது. இருப்பினும், மாவட்டத் தலைமையகத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான வீட்டுமனை இதுவரை வழங்கப்படவில்லை என்பது ஊடகத்துறையினரின் வேதனையாக உள்ளது.



இந்த கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2015 முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப் பட்டதையடுத்து, தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3 ஏக்கர் 97 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.



அந்த நிலத்திற்கான நுழைவு வழி தனியாரின் பட்டா நிலமாக இருந்ததால், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர், அந்த நிலத்திற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழங்கி, புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், 2020 பிப்ரவரி 13-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது மன்றத் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஆவணங்களை நேரில் வழங்கினர்.



நெல்லை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருமுறைகூட இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கேட்டபடி பயனாளிகள் பட்டியலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்தும், கடந்த ஆறு ஆண்டுகளாக திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்போது பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவராக ராஜேஷ், இணைச் செயலாளராக ஜாய்சன் ஆகியோர் பொறுப்பில் இருந்து இந்த பணிகளை முன்னெடுத்திருந்தனர்.



ஆட்சி மாறினாலும், இந்த விவகாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல், 39 ஆண்டுகளாக நிறைவேறாத பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்" என்ற முதல்வர் விஜயின் அறிவிப்பைப் போலவே, தமிழகம் முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் நலனையும் பாரபட்சமின்றி பாதுகாத்து, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே ஊடகத்துறையினரின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.