தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–மஹா காலபைரவர் சித்தர் பீடத்தில், தென்தமிழகத்தில் தனிச்சிறப்புடன் குருமகாலிங் கேஸ்வரராக சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, குருமகாலிங் கேஸ்வரருக்கும் நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும், பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டில் வளம் பெருகவும், பக்தர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பு நிலவவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவருக்கு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள், சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. விழாவின் நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.