ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் பெ. மதன் ராஜாவிடம் நம் நாடு, நம் மக்கள், நம் எதிர்காலம் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர் பெ. மதன் ராஜாவை, கட்சியின் தலைவர் டி.பி.எஸ். பொன் குமரன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். அருணா தேவி, நிர்வாகி ரமேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
பின்னர் அமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில், "தங்களின் மக்கள் நலப் பணிகளை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம், விவசாய மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், படித்து முடித்து வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பெ. மதன் ராஜா, "உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, ஓட்டப்பிடாரம் தொகுதியை வளமான, செழிப்பான பகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்" என்று உறுதியளித்தார்.