தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார் செயல்பாட்டால் தேவையற்ற முறையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.



அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:



தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக உள்ள 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட்களை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் அவசரகால சேவை வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது நிலையத்தை வந்தடையும் ரயில்கள் மற்றும் என்ஜின்கள் தடம் மாற்றும் பணிக்காக 1-வது ரயில்வே கேட்டை கடந்து மேலூர் பகுதியில் உள்ள எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி அருகே வரை சென்று மீண்டும் பின்னோக்கி இயக்கப்படுகின்றன. அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'ஆக்குபென்சி சென்சார்' (Occupancy Sensor / Axle Counter Sensor) செயல்படுவதால், ரயில் 2-வது ரயில்வே கேட்டை அடையாத நிலையிலும் தானாகவே எச்சரிக்கை சிக்னல் இயங்கி, 2-வது ரயில்வே கேட் மூடப்படுகிறது.



இதன் காரணமாக நாள்தோறும் பலமுறை தேவையின்றி 2-வது ரயில்வே கேட் மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலவிரயம் அடைவதுடன், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவை வாகனங்களும் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எனவே, எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள சிக்னல் சென்சார் அமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைத்து, 2-வது ரயில்வே கேட் மூடுவதற்கான சிக்னல் இன்டர்லாக்கிங் (Signal Interlocking System) அமைப்பை தனித்தனியாக செயல்படும் வகையில் மேம்படுத்தி, பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகனிடம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.