தேசிய பெற்றோர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)யில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியரின் பெற்றோருக்கான பெற்றோர்–ஆசிரியர் கழகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இறைவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வேதியியல் துறைத் தலைவர் முனைவர் இருதய அண்டோனட் சோஃபியா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி சிபானா தலைமையுரையாற்றினார்.
மேலும், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியல் அல்மோல்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் அருட்சகோதரி ரீத்தா மற்றும் பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் புனிதா தாரணி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களின் சார்பில் SDR நிறுவனத்தின் உரிமையாளர் பொன் சீலன், முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜோசப் ராஜ் மற்றும் திருமதி தனலட்சுமி பிச்சையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பெற்றோர்–மாணவர் உறவு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குடும்பத்தின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பெற்றோர்களுக்கு "நட்சத்திர பெற்றோர் (Star of the Year)" என்ற சிறப்பு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சில மாணவியர் தங்களது பெற்றோரின் தியாகம், அன்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களைப் போற்றும் வகையில் உரையாற்றி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தனர்.
இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி. செல்வமேரி நன்றியுரை வழங்கினார். கல்லூரிப் பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.