தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) லிமிடெட், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 30, 2026-இல் முடிவடைந்த காலாண்டு) ரூ.411.51 கோடி நிகர லாபம் ஈட்டி குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.



இதுதொடர்பான வங்கியின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், ஜூன் 30, 2026-உடன் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை, வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சலி எஸ். நாயர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.



கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், வங்கியின் மொத்த வணிகம் 23.04 சதவீதம் உயர்ந்து ரூ.1,21,715 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வைப்புத்தொகை 19.71 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.64,409 கோடியாகவும், மொத்த கடன்கள் 27.01 சதவீதம் உயர்ந்து ரூ.57,306 கோடியாகவும் உயர்ந்துள்ளன.



வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ.304.89 கோடியாக இருந்த நிலையில், தற்போது 34.97 சதவீதம் உயர்ந்து ரூ.411.51 கோடியை எட்டியுள்ளது. மேலும், செயல்பாட்டு லாபம் 48.22 சதவீதம் உயர்ந்து ரூ.611.07 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் சொத்துத் தரமும் தொடர்ந்து மேம்பட்டுள்ளது.



மொத்த வாராக்கடன் (Gross NPA) 1.22 சதவீதத்திலிருந்து 0.69 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் (Net NPA) 0.33 சதவீதத்திலிருந்து 0.17 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதேபோல், CASA வைப்புத்தொகை 16.94 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.16,852 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் (NII) 32.01 சதவீதம் உயர்ந்து ரூ.765.08 கோடியாகவும் பதிவாகியுள்ளது.



நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி புதிதாக 6 கிளைகள் மற்றும் ஒரு மண்டல அலுவலகத்தை திறந்து தனது சேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 628 கிளைகள், 13 மண்டல அலுவலகங்கள் மூலம் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.



பொறுப்பான கடன் வழங்கல், டிஜிட்டல் தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் சில்லறை, விவசாயம், MSME (RAM) துறைகளில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக வங்கி தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சலி எஸ். நாயர் தெரிவித்தார்.