தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சுயநிதிப் பிரிவின் 25-வது ஆண்டு வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி, "நம்பிக்கையும் சிறப்பும் மிளிரும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில், வியாழக்கிழமை காலை கல்லூரி கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் செர்வைட் மாகாணத் தலைவர் அருட்சகோதரி முனைவர் மேரி ஜாய்ஸ் பேபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெள்ளி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்றும், மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் பணியில் கல்வி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் எஸ். குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம்.எஸ். எழிலரசி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் அ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமையேற்று விழாவை சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் செயலாளர்கள், முன்னாள் முதல்வர் ஜெசி பெர்ணடோ, சுயநிதிப் பிரிவின் முன்னாள் இயக்குநர்கள், பழைய மாணவர்கள், நலவிரும்பிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக சுயநிதிப் பிரிவின் 25-வது ஆண்டு வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி, சுயநிதிப் பிரிவு கடந்த 25 ஆண்டுகளாக கல்வித் துறையில் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவையை நினைவுகூரும் வகையிலும், அதன் வளர்ச்சிப் பயணத்தைப் பெருமையுடன் கொண்டாடும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.