திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழா மழையையும் மீறி பக்தி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலைகளிலும் கடற்கரைப் பகுதியில் மக்கள் வெள்ளம் குமுறும் நிலையில், நிர்வாகம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அக்டோபர் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, அக்டோபர் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் விழா நாளை (27ஆம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவிற்காக எந்தவிதமான சிறப்பு வாகன அனுமதி பாஸ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,” என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “மழை காரணமாக வாகன நிறுத்துமிடங்கள் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் நாளை மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. எனவே பக்தர்கள் பொறுமையுடன், ஒழுங்காக பயணிக்க வேண்டுகிறோம்,” என்றார்.

நிர்வாகம் தெரிவித்ததாவது, தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது எனவும், சூரசம்ஹார நாளில் கோயில் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து தடை அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

திருச்செந்தூரில் காவல்துறை, தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர். மழை காரணமாக தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.