தூத்துக்குடி – திருநெல்வேலி பைபாஸ் சாலையில் மையவாடி எதிரே அமைந்துள்ள சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் மற்றும் வேன் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள திம்மையா காலனியில் முக்கிய பிரதான சாலை ( சர்வீஸ் சாலை) அமைந்துள்ளது.
இந்த சாலையில் தூத்துக்குடி மாவட்ட ஜவான்ஸ் பொது நலச் சங்கம் சார்பில் துணை ராணுவப் படை நல வாரிய கேண்டீன் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் பயன்படுத்தும் தனியார் உடற்பயிற்சி மையமும் இப்பகுதியில் இயங்கி வருகிறது.
இதன் காரணமாக தினந்தோறும் பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிக அளவில் காணப்படுகிறது.
ஆனால், இந்த சாலையில் வேகத்தடை வசதி இல்லாத காரணத்தால் சில வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் விபத்து அபாயம் நிலவி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உடற்பயிற்சி மையத்திற்கு வருகை தருபவர்கள் சாலையை கடக்கும் போது பாதுகாப்பு சவால்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருள் சூழ்ந்த நிலையில் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திம்மையா காலனி பிரதான சாலையில் உரிய இடங்களில் வேகத்தடைகள் அமைப்பதுடன், போதிய தெருவிளக்கு வசதிகளையும் ஏற்படுத்தித் தர தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகத்தடை மற்றும் தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.