தூத்துக்குடி மாநகராட்சி கல்வி மற்றும் சமூக நல துறைகளில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
மாநகராட்சி ஜே.எஸ்.நகர் தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் மற்றும் மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் ஆகியவற்றை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் நடைபெற்றது.

மாநகராட்சி சார்பில் மாநில நிதி ஆணைய நிதியில் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டில் 967 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், மாணவர்களுக்கு சிறந்த கல்வி சூழலை வழங்க உள்ளது.

அதேவேளை, மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக சமூக கூட்டாண்மை பொறுப்புநிதியின் பங்களிப்பில், ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில், 8978 சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் நோக்கம் — மது மற்றும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை, மறுசீரமைப்பு வழங்கி, அவர்கள் மீண்டும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப உதவுவது.

இங்கு 40 படுக்கைகள் கொண்ட மருத்துவ வார்டு, மருத்துவர் அறைகள், ஆலோசனை அரங்கம், ஆய்வகம், வெளி நோயாளி பிரிவு, உளவியல் அறை, உணவுக்கூடம், சமையலறை, சிகிச்சை அறைகள் என முழுமையான வசதிகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா, துணைமேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மூத்த மனநல மருத்துவர் செ.ராமசுப்பிரமணியன், டாக்டர் சிவசைலம், நகர் நல அலுவலர் சரோஜா, மாநகர பொறியாளர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.