தூத்துக்குடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் உணர்ச்சி பொங்கிய தருணத்திற்கு சாட்சியமானது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடையில் பேசிய போது, அமைச்சர் கீதா ஜீவன் கண்கலங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், “நமது வெல்லும் வேட்பாளர், என் ஆருயிர் அண்ணன் பெரியசாமி அவர்களின் மகள், நான் ‘பெண் சிங்கம்’ என்று பாராட்டியவர்” என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி சாதனை படைத்த சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சராக கீதா ஜீவன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். “உங்கள் மண்ணின் மகள் கீதா ஜீவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் இந்த பாராட்டுச் சொற்கள் கேட்கும் தருணத்தில் மேடையிலேயே நின்றிருந்த கீதா ஜீவன் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். அந்த தருணம் கூட்டத்தில் இருந்தோரையும் உருக்கச் செய்தது.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தொகுதி அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தொகுதி மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் தொகுதி ராமஜெயம், கோவில்பட்டி தொகுதி சுப்பிரமணியன், திருவைகுண்டம் தொகுதி ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சின் போது கீதா ஜீவன் கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.