தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன், நகரின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மையப்படுத்திய பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்தில் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை சீராக நிறுத்தி வைக்க மூன்று புதிய பிங்கர் ஜெட்டி பாலங்கள் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள தூண்டில் பாலம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குறைந்தது மூன்று இடங்களில் தகவல் மற்றும் சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். பொதுமக்களின் சுகாதார தேவைகளை கருத்தில் கொண்டு, நகரின் பல்வேறு இடங்களில் கூடுதல் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் புதிய பார்க்கிங் வசதிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், முத்துநகர் கடற்கரை முதல் முயல் தீவு வரை உள்ள பகுதிக்கு படகு சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கீதா ஜீவன் அறிவித்தார்.
இந்த வாக்குறுதிகள் மூலம் தூத்துக்குடி நகரின் கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுலா துறைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.