துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ், நேற்று இருவப்பபுரம் காடோடிபனை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது எதிர்பாராத விதமாக கிராம மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய அமிர்தராஜிடம், “கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்? இங்கு என்ன பிரச்சினைகள் நடக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?” என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.


இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர், “ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக இப்போதுதான் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். இதுவரை உங்களை நாங்கள் போட்டோவில் தான் பார்த்தோம்” என கடும் அதிருப்தி தெரிவித்தனர்.


“எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்” எனக் கூறி, மக்கள் அமிர்தராஜை அங்கிருந்து திரும்பச் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.