தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் 24வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 88 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. கல்வி பயிலும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளி வருகை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் ராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூபினா ரொபினோ, உதவி தலைமை ஆசிரியர் கிரேஸ் கெத்சிபாய், மாநகராட்சி கவுன்சிலர் மெட்டில்டா, முதன்மை கல்வி அலுவலர் சங்கிதா சின்னராணி, பகுதி திமுக செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.