தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாகக் கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் ஆலோசனையின்படி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.


பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாதது, மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக்காட்டி போராட்டக்காரர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் இளையராஜா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவன், லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மதிமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் தங்ககுமார், ராஜேந்திரன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.