தூத்துக்குடி மாநகராட்சியில், மக்கள் பங்கேற்பு திட்டமான “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலங்கார வண்ண விளக்குகள் சில மாதங்களிலேயே செயலிழந்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.


கடந்த 2024 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், மாநகரின் முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன்களில் உள்ள மின் கம்பங்களில் அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. இதில் தேசியக்கொடி நிற விளக்குகள் ரூ.59 லட்சத்து 84 ஆயிரத்து 685 மதிப்பிலும், சாதாரண வண்ண விளக்குகள் ரூ.38 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் ரூ.98 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆனால், திட்டம் தொடங்கிய சில மாதங்களிலேயே பல இடங்களில் விளக்குகள் அணைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், திட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.


பா.ஜ., தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


“மக்கள் பங்களிப்புடன் நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட திட்டம், குறுகிய காலத்திலேயே செயலிழந்துள்ளது. இதற்கான ஒப்பந்த நகல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டதா? பராமரிப்பு காலம் எவ்வளவு? தரப்பரிசோதனை செய்யப்பட்டதா? இறுதி ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா? பழுதடைந்த விளக்குகள் குறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? அபராதம் விதிக்கப்பட்டதா? ரூ.98 லட்சம் எந்த தீர்மானத்தின் மூலம் செலவிடப்பட்டது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் சட்டபூர்வமான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.