மதுரா கோட்ஸ் தொடர்பான அரசு நில விவகாரத்தில், மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழுவினர் 1947 முதல் தற்போதுவரை உள்ள நில ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியாளரிடம் இன்று ஒப்படைத்தனர்.


கடந்த 5ம் தேதி சார் ஆட்சியாளரை சந்தித்த போது, இந்த நிலம் தொடர்பாக மேலும் ஆவணங்கள் இருந்தால் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், அனைத்து ஆவணங்களும் இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக குழுவினர் தெரிவித்தனர்.


இதனை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியாளர், மதுரா கோட்ஸ் நிறுவனம் மற்றும் வேலவன் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் ஆகியவற்றிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர்கள் தரப்பிலிருந்தும் சில ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அந்த நிலம் அரசு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


மேலும், விசாரணை முடியும் வரை மதுரா கோட்ஸ் இடத்தில் எந்தவிதமான பொருட்களையும் அப்புறப்படுத்தவோ, எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவோ அனுமதி வழங்கப்படாது எனவும் சார் ஆட்சியாளர் வாய்மொழியாக உறுதி அளித்தார்.


இந்த சந்திப்பில் அருட்தந்தை X.D. செல்வராஜ் (PUCL மாவட்ட தலைவர்), மா. மாரி செல்வம் (புரட்சி பாரதம் கட்சி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர்), சா.மு. காந்தி (தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் தலைவர்), மின்னல் அம்ஜத் (AICCTU தேசிய செயற்குழு உறுப்பினர், மாவட்ட தலைவர்), கிருஷ்ணமூர்த்தி (ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க தலைவர்), டாக்டர். அ. கோல்டன் பரதர் (தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனர்), தாளமுத்து செல்வா (மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர்), அர்ச்சுனன் (தமிழர் முன்னேற்ற கழகம் நிறுவனர் தலைவர்), ஜான் பி. ராயர் (சமர் குடிமக்கள் இயக்கம்), ராஜா (தமிழர் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர்) மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.