தமிழகத்தில் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), “போதை பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?” என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சாமானிய நபர் மீது இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், திருப்பூரில் போதை நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்திகளாக மாறி இருப்பதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பிய இபிஎஸ், “அடுத்த நொடி யார் எந்த போதையில் நம்மை தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?” என சாடியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சருக்கு, ஸ்டாலின் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மூன்று அடி உயர கஞ்சா செடி கூட தெரியவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்திகள் அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்றும் விமர்சித்துள்ளார்.
“போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டம் ஒழுங்கை காக்க முடியவில்லை என்றால் எதற்காக இந்த ஆட்சி?” என கேள்வி எழுப்பிய இபிஎஸ், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற முதல்வரிடம் தமிழக மக்கள் சிக்கித் தவித்தது போதும் என தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “2026 ஆம் ஆண்டு விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தனது அறிக்கையில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.