தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் பட்டியலின பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட வணிக வளாகக் கடைகளை அகற்றி, அதே இடத்தில் புதிய கடைகள் கட்டும் பணிக்கு பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு தடை விதித்து வருவதாக தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.


ஆறுமுகநேரி பேரூராட்சியில் 1995 ஆம் ஆண்டு, அரசாணை எண் 32 (நாள்: 15.03.1995)ன் படி, ஆதிதிராவிட நலத்துறை மூலம் சுமார் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள பட்டியலின பழங்குடி மக்களுக்கு தொழில் செய்யும் வகையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கடைகளின் வாடகைத் தொகையில் பாதி பேரூராட்சிக்கும், மீதிய பாதி ஆதிதிராவிட நலத்துறைக்கும் செலுத்தப்பட்டு வந்ததாகவும், மத்திய–மாநில அரசுகளின் நிதியுதவியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் மூலம் பல குடும்பங்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலப்போக்கில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கடைகள் பழுதடைந்த நிலையில், அவற்றை அகற்றி புதிதாக கடைகள் கட்ட தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ஆதிதிராவிட நலத்துறை அரசாணை எண் 88 (நாள்: 04.07.2025)ன் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு, பணியை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர் பழைய கடைகளை இடித்து புதிய கட்டுமான பணிக்காக தோண்டுதல் பணிகளை தொடங்கியுள்ளார்.


இந்நிலையில், பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் செயல் அலுவலர், “இந்த இடத்தில் எஸ்.சி. மக்களுக்கு கடைகள் கட்டக்கூடாது” என கூறி பணிகளை தடுத்து நிறுத்தியதுடன், அந்த இடத்தை இரும்பு முள்வேலி வைத்து அடைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக தாட்கோ அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், கட்டுமான பணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், இது திட்டமிட்ட தீண்டாமை செயல் எனவும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது.


இதனால், ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்தில் மீண்டும் கடைகள் கட்ட முடியாத நிலை உருவாகி, அரசின் நலத்திட்டம் பட்டியலின பழங்குடி மக்களுக்கு சென்றடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் மாநில தலைவர் காந்தி மல்லர் தெரிவித்துள்ளார்.


இதனை கண்டித்து, வருகின்ற 15.02.2026 அன்று ஆறுமுகநேரி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு, ஏற்கனவே செயல்பட்ட அதே இடத்தில் கடைகள் கட்ட உத்தரவிட வேண்டும். இல்லையெனில், இப்பகுதியில் உள்ள பட்டியலின பழங்குடி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை ஆதிதிராவிட நலத்துறை ஆணையாளர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஏற்கனவே மனு அனுப்பியுள்ளதாகவும் காந்தி மல்லர் தெரிவித்துள்ளார்.