தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள 60 அடி அகலமான பிரதான சாலையில், குழாய் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக முறையாக மூடப்படாமல் இருப்பதால், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மண்டல தலைவர் சுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலையான ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் மூன்று அடி அகலத்திலும் அரை அடி ஆழத்திலும் உள்ள பள்ளங்கள் பல இடங்களில் இன்னும் திறந்த நிலையிலேயே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் எப்போது வேண்டுமானாலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் பக்கீல் ஓடை பகுதியில் பள்ளத்தில் விழுந்து நிலை தடுமாறி, அருகில் வந்த வாகனத்தில் சிக்கி ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்த அவர், அந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
“இதேபோன்ற விபத்து ஸ்டேட் பாங்க் காலனி சாலையிலும் நிகழும் அபாயம் உள்ளது. இதுவரை இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்துள்ளதா? மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட மறுசீரமைப்பு நிதி எங்கு செலவிடப்பட்டுள்ளது? மக்களின் உயிர் பாதுகாப்பை விட நிர்வாக அலட்சியம்தானா முக்கியம்?” என சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, மக்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் உள்ள அனைத்து பள்ளங்களையும் முழுமையாக மூடி, சாலையை பாதுகாப்பான நிலையில் மாற்ற வேண்டும் என தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னிராஜ், மாவட்ட செயலாளர் சேர்ம குருமூர்த்தி, மதராஜன், சந்தனகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.