தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையை தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுடலையாபுரம், மாதாநகர், இராஜபாளையம், தாளமுத்துநகர், பூபாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேக்கம் நிலவுகிறது. இந்த சூழலில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கனமழையால் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள், மோட்டார் பம்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து களத்தில் (நேரடி) ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி., உடன் வந்த அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

இந்த ஆய்வின்போது மனம் நெகிழவைக்கும் ஒரு தருணம் நிகழ்ந்தது. மாப்பிள்ளையூரணி – இராஜபாளையம் பகுதியில், அங்கு வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டி தரும்படி கனிமொழி எம்.பி.-யிடம் கேட்டனர். அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அவர், அந்த குழந்தைக்கு ‘மலர்’ என அன்பு நிறைந்த பெயர் சூட்டினார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு பணியில் கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, உதவி செயற்பொறியாளர் ரவி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய துணைச் செயலாளர் கணேசன், சுற்றுச்சூழல் அமைப்பாளர் ராஜேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆய்வில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் வெள்ளநீர் பாதிப்பால் அவதி அடைந்த மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனக் கூறிய கனிமொழி எம்.பி., பொதுமக்களின் நலனில் அரசு செயற்படுவதை வலியுறுத்தினார்.