தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்தியங்கிரா தேவி பீடத்தில் சித்திரை மாதம் 8ஆம் தேதி (21-04-2026, செவ்வாய்க்கிழமை) வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகாயாகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த விழா சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழிக்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதன்படி, ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மகாயாகத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
மதியம் நடைபெற்ற மஹா அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையிலான வழிபாட்டுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.