தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக எழுந்த முறைகேடு புகார் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட டெண்டர்களையும் அதற்கான பணி உத்தரவுகளையும் மாநகராட்சி ஆணையர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். முன்னாள் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கடந்த 2025 ஏப்ரல் 4ஆம் தேதி மின்னணு ஏல அறிவிப்பு வெளியிட்டார். இதில் மொத்தம் ஐந்து பணிகள் இடம்பெற்றிருந்தன. அதில் 1, 2 மற்றும் 5ஆம் எண் பணிகளாக பி.என்.டி. காலனி 12வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானம், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புற தார்சாலை மற்றும் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் உள்ள ஆயிரம் பிறை பூங்காவில் வேலி அமைத்து மின்விளக்குகள் பொருத்துதல் ஆகியவை அடங்கும்.
ஆனால், இப்பணிகளில் சில ஏற்கனவே முடிக்கப்பட்டு 2025 பிப்ரவரி 17ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதாகவும், மாநகராட்சி அலுவலக பின்புற சாலை பணியும் டெண்டருக்கு முன்பே தொடங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெற்றார். இந்த வழக்கு கடந்த மார்ச் 11ஆம் தேதி இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குற்றச்சாட்டு எழுந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி, மார்ச் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக உள்ள ப்ரியங்கா, சம்பந்தப்பட்ட டெண்டர்களையும் பணி உத்தரவுகளையும் முழுமையாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த டெண்டர் ரத்து நடவடிக்கை தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.