முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக வர்த்தக அணி சார்பில் தூத்துக்குடியில் நள்ளிரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் விழாவை கொண்டாட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


அண்ணா பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், மாநில வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். நள்ளிரவு நேரத்திலும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகம் வெளிப்படுத்தினர்.


நிகழ்ச்சியில் பேசுகையில் செல்லப்பாண்டியன் கூறியதாவது:


அதிமுகவை தொடங்கியவர் மக்கள் பணியில் ஈடுபட்டவர் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர். அவரின் அரசியல் மரபை தொடர்ந்து முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கட்சியை கட்டுப்பாட்டுடனும் கட்டுக்கோப்புடனும் வழிநடத்தி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது என்றார்.


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப் பட்டுள்ளதாகவும், அதில் பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


மேலும், தூத்துக்குடி மாநகருக்கு 278 கோடி ரூபாய் மதிப்பில் 4வது குடிநீர் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பலனாக இன்று மக்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் பெற்று வருகின்றனர் என்றும், எடப்பாடி ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.


விழாவில் மில்லை ராஜா, செரினா பாக்கியராஜ், துரைசிங், மனோஜ்குமார், ராஜகோபால், ஜீவா பாண்டியன், பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.