தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிறைவடைந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா திடீரென அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேயரும் ஆணையரும் மாடிக்கு ஏறியதை பார்த்த அதிகாரிகளும் பணியாளர்களும் அவசரமாக பின்தொடர்ந்தனர். மொட்டை மாடியில் ஆய்வு செய்த மேயர் ஜெகன், அங்கு ஒரு பகுதியில் சிறிய அளவில் வளர்ந்திருந்த மரத்தைக்காட்டி, “இது உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறு வளர அனுமதித்தது ஏன்?” என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், மொட்டை மாடியில் பழைய பைப்புகள் குவிக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், “இந்த பைப்புகள் இங்கு இருப்பதற்கு காரணம் என்ன? உடனடியாக அகற்றி மாநகராட்சி குடோனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதேபோல், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி, கீழ் தளத்திற்கு நீர் கசிவு ஏற்படுவதை கண்டறிந்த மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா, “எந்தெந்த இடங்களில் லீக்கேஜ் உள்ளதோ அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும். கட்டிடத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படக்கூடாது” என அதிகாரிகளுக்கு கடும் அறிவுறுத்தல் வழங்கினர்.

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா மொட்டை மாடிக்கு சென்று ஆய்வு செய்தது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகளிடம் பேசிய மேயர் ஜெகன், “மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை 100 சதவீதம் பாதுகாப்பது அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்களின் கடமை. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மீண்டும் திடீரென நான் ஆய்வுக்கு வருவேன். அப்போது எல்லாம் சுத்தமாகவும், குறைகள் முற்றிலும் சரி செய்யப்பட்டும் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இந்த திடீர் ஆய்வு, மாநகராட்சி அலுவலகங்களில் பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.