திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா நேற்று கோலாகலமாகவும், பக்தர்களின் பேரதிரளுடனும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த தைப்பூசத் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காணாமல் போன 25 குழந்தைகள் மற்றும் 9 முதியவர்கள் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேபோல், பக்தர்கள் தவறவிட்ட 8 பைகள், 12 செல்போன்கள், ஒரு தங்க மோதிரம், 3 ரேசன் அட்டைகள், 4 வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.5,400 பணம் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து தகவல் அறிவிக்கப்பட்டு, குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் முதியோரின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். தவறவிட்ட உடைமைகளும் உரிய பக்தர்களை கண்டறிந்து ஒப்படைக்கப்பட்டன. கூட்ட நெரிசலிலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு குழந்தைகள், முதியோர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக மீட்டு ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.