தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESI) மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கிடைக்கும் பல்வேறு சலுகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஎஸ்ஐ ஸ்மார்ட் அட்டைகள் வழங்கியபோது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், கடந்த காலத்தில் எம்.பி. கனிமொழி அவர்களின் முயற்சியால் 3,160 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், பதிவு செய்த அனைவரும் பல்வேறு நலன்களையும் சலுகைகளையும் பெறுவதாகவும் தெரிவித்தார். தாட்கோவில் பதிவு செய்தவர்கள் தொழில் கடனாக ரூ.50 ஆயிரம் வரை பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இந்த நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆணையருடன் ஆலோசித்து இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 7-8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இஎஸ்ஐ மருத்துவமனை, எம்.பி. கனிமொழி அவர்களின் முயற்சியினால், ரூ.100 கோடி மதிப்பில் தனியார் மருத்துவமனை தரத்தில் கட்டப்பட்டு வருவதாகவும் விரைவில் மக்களுக்கு சேவையளிக்கத் தொடங்கும் என்றும் மேயர் தெரிவித்தார்.

“சிகிச்சை தரமும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கும். தொழிலாளர்களுக்கான உடை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படும். பணியாளர்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி முன்மாதிரியான மாநகராட்சியாக செயல்படுகிறது,” என அவர் வலியுறுத்தினார்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, தாட்கோ மேலாளர் ஜனினிஸ் டெர்சிபா, தூத்துக்குடி இஎஸ்ஐ கிளை மேலாளர் சுமித்ரா, சமூக பாதுகாப்பு அலுவலர் அஸ்வின், டாக்டர் முத்தழகு, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், ராஜபாண்டி, சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.