தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி தொடர பொருளாதார சிக்கல்கள் தடையாக உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாமை நடத்துகிறது.
இந்த முகாம் வரும் 27.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 2024-2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் மற்றும் ஏற்கனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
கல்வி கடனுக்காக விண்ணப்பிக்க மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புக், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ஆம் வகுப்பு, +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவர்களுக்கு), Bonafide சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம் மற்றும் கட்டண ரசீதுகள் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோர் தங்களது பான் கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு பாஸ் புக் மற்றும் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் PM Vidyalaxmi இணையதளத்திலும் கல்வி கடனுக்காக பதிவு செய்து கொள்ளலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த கல்வி கடன் மூலம் நிதி உதவி பெற முடியும். இந்த கல்வி கடன் முகாம் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.