தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை ஜனநாயக மரபுகளையும், பொதுஅமைதியையும் மீறும் வகையில் இருந்ததாக பாஜக மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கடந்த 22.02.2026 அன்று திமுக சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி பாஜக மற்றும் அதன் நிர்வாகிகளை குறிவைத்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அதிகாரப் பதவியில் உள்ள ஒருவர் பொது மேடையில் எதிர்க்கட்சியை அச்சுறுத்தும் விதமாக பேசியது ஜனநாயக விரோதமான செயல் என ஆர். சித்ராங்கதன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க முயலும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்கிடமானது என்றும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.


பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான பேச்சுகள் சமூக நல்லிணக்கத்திற்கே பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.


பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது. அதிகாரத்தின் பலத்தை நம்பி அரசியல் எதிரிகளை மிரட்டும் அரசியல் பண்பாடு ஏற்க முடியாதது என்றும், காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.