தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சங்கரன் இன்று காலை தூத்துக்குடி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் பணி செய்து கொண்டு இருந்தார்.

மார்க்கெட் எதிரே அண்ணா சிலை பின்புறம் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தார் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அந்த சாலையை பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சங்கரன் சிறிதும் யோசிக்காமல் பைப் லைன் இணைப்பதற்காக அருகில் தோண்டப்பட்டு மண் குவிக்கபட்டுள்ள இடத்தில் இருந்து மேடு பள்ளம் உள்ள சாலையை சீர் செய்வதற்கு மண்ணை மண்வெட்டி மூலம் தன் கைகளால் அள்ளி சாலையை சீரமைத்து பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார்.

இதை பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை ஒரு நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.