நாட்டின் 88-வது மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஸ்ரீவைகுண்டத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் சித்ராங்கதன், “தமிழ் கடவுள் முருகன் பெருமானுக்கு உகந்த தைப்பூசம் திருநாளில், தமிழகத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்” என்றார். தைப்பூச திருநாளை முன்னிட்டு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்ததை நினைவூட்டிய அவர், இது தமிழர் பண்பாட்டிற்கும் மரபிற்கும் மத்திய அரசு அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதாக விளக்கினார். 1876-ஆம் ஆண்டு ஜெர்மன் அறிஞர் டாக்டர் ஜாகர் (Dr. Jagor) முதன்முறையாக அகழாய்வு மேற்கொண்டு அடக்கம் கலங்களை கண்டறிந்ததன் மூலம், ஆதிச்சநல்லூர் தமிழர்களின் நாகரிகம் உலக கவனத்திற்கு வந்ததாக கூறினார்.
1903–1904 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை சார்பில் எப். அலெக்சாண்டர் ரியா மேற்கொண்ட அகழாய்வில், நூற்றுக்கணக்கான மண் கலங்கள், மனித எலும்புகள் மற்றும் உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது தென் இந்தியாவின் மிகப் பெரிய Burial Site எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 21-ஆம் நூற்றாண்டில் Radiocarbon Dating, DNA, Skeletal Analysis போன்ற அறிவியல் முறைகள் மூலம் ஆதிச்சநல்லூர் நாகரிகம் கிமு 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மத்திய அரசின் முன்னெடுப்புகள் குறித்து பேசுகையில், 2020–21 மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரை “Iconic Archaeological Site” ஆக அறிவித்ததும், 2023-ஆம் ஆண்டு உலகத் தரத்திலான அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் என குறிப்பிட்டார்.
இதற்காக இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் பல கட்டங்களில் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், திமுக இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இதற்கான எந்த முன்னேடுப்பும் எடுக்கப்படவில்லை என விமர்சித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலோசகரபட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்காகவும் இந்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாவட்ட இளைஞர்களுக்கு பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை சாலை (ECR) விரிவாக்கத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என்றார். பெண்கள் மற்றும் MSME நலத்திட்டங்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் பெண்கள் தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்காக புதிய கடன் வசதிகள், சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் நிதி ஆதரவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழகம் குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் கூறினார்.
மேலும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயண பொறுப்பாளராக முன்னாள் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி, எதிர்வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதியாக உயர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி. ராஜா, மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், சிவராமன், ஸ்ரீவைகுண்டம் மண்டல் தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் சங்கர், பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் சுவாமிநாதன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், அமைப்புசாரா மாவட்ட தலைவர் சித்திரைவேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.