தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம் யூனியன் அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக, சுமார் 25 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அஸ்திவாரம் அமைத்து கம்பி கட்டும் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்திருந்தன. இந்த நிலையில், சில சுயநல நோக்கமுடைய நபர்கள், பேருந்து நிலையம் தங்கள் பட்டா நிலத்திற்கு மாற்றப்பட்டால் நில மதிப்பு உயரும் என்ற குறுகிய அரசியல் நோக்கத்துடன், அரசுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த பணிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக, ஏற்கனவே முன்னேற்றம் கண்டிருந்த பேருந்து நிலையப் பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ள சம்பவம், கருங்குளம் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் பட்சத்தில், கருங்குளம் யூனியனை அணுகும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், பள்ளி மாணவ–மாணவிகள் உள்ளிட்டோர் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.


மேலும், கருங்குளம் யூனியனுக்குட்பட்ட 32 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாடப் போக்குவரத்திற்காக இந்த பேருந்து நிலையத்தையே நம்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருங்குளம் மண்டல தலைவர் சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் கூறுகையில், “பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட பேருந்து நிலையப் பணியை, சிலரின் சுயநல அரசியல் அழுத்தங்களுக்காக நிறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பணிகள் தொடங்கியுள்ள அதே இடத்திலேயே பேருந்து நிலையம் கட்டி முடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.


மேலும், “இந்த நியாயமான மக்கள் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால், கருங்குளம் பகுதி பொதுமக்களை ஒன்றிணைத்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மக்கள் நலத் திட்டங்கள் சுயநல அரசியலுக்கு பலியாகக் கூடாது என்பதே, தற்போது கருங்குளம் பகுதி மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.