மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிரம் (PMJVK) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில், 637 படுக்கைகள் கொண்ட நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மருத்துவமனை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைக்கு மட்டும் ஒதுக்கப்படாமல், இதய நோய், நரம்பியல், சிறுநீரக சிகிச்சை, விபத்து சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் வழங்கும் முழுமையான மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் அவசியமானதாக உள்ளதால், மத்திய அரசு மக்கள் நலனுக்காக வழங்கிய நிதியில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, எந்த தாமதமும் இன்றி முழுமையாக திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதனை வலியுறுத்தும் வகையில்,
ஜனவரி 20ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, தூத்துக்குடி VVD சிக்னல் அருகில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆர். சித்ராங்கதன் அழைப்பு விடுத்துள்ளார்.