தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு அளவிலான பிரச்சனைகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து பொதுமக்களுடன் விவாதித்து முடிவெடுக்கும் ஜனநாயக அமைப்பாக பகுதி சபா செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 3-வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம் பகுதி சபா உறுப்பினர்களான பிரபாகரன், செல்வராஜ், ஜவகர், டேனியல், ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 3-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி கலந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் இருந்து நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், பொதுமக்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக, அவற்றை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் மேம்பாடு தொடர்பான முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த பகுதி சபா கூட்டத்தில் ராஜாமணி, ராஜசேகர், ராஜேஷ், கோபால், சேவியர், ராமர், ஜெயா, நம்பி உள்ளிட்டோர் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.