தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற முடியாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தின் கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பருவத்துக்கு தேவையான கடன்களை பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.


கடனை முறையாக திருப்பிச் செலுத்திய பின்னர், மீண்டும் கடன் பெற்று விவசாயச் செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக கடனை திருப்பிச் செலுத்திய பல விவசாயிகள் மீண்டும் கடன் பெற முயன்றபோது, பல்வேறு காரணங்களை கூறி அவர்களை அலுவலகங்களுக்கு இடையே அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதனால், சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் உமரிக்காடு பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் கிடைக்காததால் விவசாயப் பணிகளை தொடங்க முடியாமல் கவலை தெரிவித்துள்ளனர்.


இந்த நிலைமை தொடர்ந்தால் பருவ விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தகுதியான விவசாயிகளுக்கு கடன்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.