தூத்துக்குடி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் R.மீனாட்சி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்வே பணியின் போது குப்பைத் தொட்டியில் கிடந்த சுமார் 35 பவுன் தங்க நகைகளை கண்டறிந்தார்.
கண்டெடுக்கப்பட்ட அந்த தங்க நகைகளை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாமல், உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்த R.மீனாட்சியின் நேர்மையான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர், ரயில்வே உயர் அதிகாரிகள் மூலம் அந்த 35 பவுன் தங்க நகைகள் தொலைத்த சம்பந்தப்பட்ட நபரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த மனிதநேயமும் நேர்மையும் மிக்க செயலைப் பாராட்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புறநகர் மாவட்ட கழக செயலாளர் P.மதன்ராஜா (B.E., MBA) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கழக பொருளாளர் அருண்குமார் தலைமையில் R.மீனாட்சிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்வில், புறநகர் மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர்களான கௌதம் பாண்டியன், அருண் பிரகாஷ், தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ரயில்வே சுகாதார ஆய்வாளர் ஆர்.முருகன், சுகாதார மேற்பார்வையாளர் துரைமுருகன், புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் அருள்ராஜ், ஈஸ்வர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.