தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு காணும் வகையில், மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள் மற்றும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் தங்களின் குறைகளை தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதிய மனுவாக அன்றைய தினம் நேரில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெயர் மாற்றம், புதிய எரிவாயு இணைப்பு வழங்குவதில் காலதாமதம், விநியோகஸ்தர்களின் சேவை குறைபாடுகள், டெபாசிட் தொகை திருப்பி வழங்கல், புதிய இணைப்பு கோரிக்கையின் நிலை, எரிவாயு மானியம் உரிய வங்கி கணக்கில் காலத்துக்கு வரவு வைக்கப்படாதது, விநியோக பணியாளர்கள் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட எரிவாயு நுகர்வோர்களை பாதிக்கும் அனைத்து குறைகளையும் எடுத்துரைத்து தீர்வு காணலாம்.

இந்த வாய்ப்பை பொதுமக்களும், எரிவாயு நுகர்வோர்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.