தூத்துக்குடி மேலசண்முகபுரம் வண்ணார் 3வது தெரு தொடர்ச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கொடை விழாவின் முக்கிய நிகழ்வாக முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
கோவில் கொடை விழா கடந்த 23ஆம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஸ்ரீ முத்துமாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி இரவு நேரங்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், அம்மன் கும்மிப்பாட்டு மற்றும் வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 8ஆம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை கன்னி விநாயகர் கோவிலில் இருந்து அக்னிச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதியக்கொடை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மெகா அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மாலையில் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன. பின்னர் இரவு 101 பெண்கள் முளைப்பாரி ஏந்தியும், 504 பெண்கள் மாவிளக்கு ஏந்தியும் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சாமக்கொடை நடைபெற்றது. பின்னர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞானராஜ், செல்வராஜ், பொன்ராஜ், மாரி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பிரபு, தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச்செயலாளர்கள் முருகேசன், கனகமாரியப்பன், சதீஷ்குமார், மனோராஜ், ராஜசேகர், பொருளாளர் பழனிக்குமார், கௌரவ ஆலோசகர்கள் செல்வராஜ், விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.